நாட்டை விற்கும் கூட்டுக் களவாணிகள்!
இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு 73 இலட்சம் கோடி ரூபாய்கள்!
ஸ்பெயின் தேசத்துக் காளைகளை வீரர்கள் ‘அடக்குவதை’ நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்; கட்டுக்கடங்காத கோபத்தோடு அந்தக் காளை பாயும். ஆனால் எதைப் பார்த்து? அதில் தான் இருக்கிறது அந்த ‘வீரத்தின்’ சூட்சுமம். காளையை அடக்கும் வீரன் கையில் ஒரு வண்ணத் துணியைப் பிடித்து அதன் முன் ஆட்டிக் கொண்டிருப்பான். அதை ஏதோ விரோதமான ஒன்று என நினைத்து ஏமாறும் காளை அதன் மேல் பாயும். இப்படி தொடர்ந்து பாய்ச்சல் காட்டிக் காட்டி தனது சக்தியை எல்லாம் இழந்த ஒரு தருணத்தில் அந்த வீரன் தன் கையில் இருக்கும் கத்தியை காளையின் மேல் பாய்ச்சுவான். இது அக்காளையைப் பொருத்தவரையில் ஒரு கண் கட்டி வித்தைதான். அதன் கண்களைக் கட்டி ஏமாற்றி – அதனை வெல்கிறான் அந்த வீரன்.
இப்போது இந்திய தேசத்தை அந்தக் காளையாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பாய்ச்சலை இந்தத் தேசத்து மக்களின் ஆத்திரம் என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்ணத் துணி தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா. அவரைப் பிடித்து ஆட்டும் கைகள் தான் மன்மோகன் சிங். அந்தக் கைகளை இயக்கும் மூளை தான் பன்னாட்டு நிறுவனங்களும் உலக வங்கியும். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் களம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டுமானால், ஒரு மாபெரும் பந்தி நடந்து முடிந்துள்ளது – அதில் பரிமாறப்பட்டது நமது நாட்டின் முக்கியமான ஒரு இயற்கை வளம். பந்தியை நடத்தியது மன்மோகன் தலைமையிலான ஆளும் வர்க்கமும் பா.ஜ.க,காங்கிரசு,திமுக உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகளும் – தின்று ஏப்பம் விட்டது பன்னாட்டுக் கம்பெனிகள் முதல் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் வர்க்கம் வரை – பந்தி பரிமாறியது ஆ.இராசா. இப்போது விவகாரம் வெளியானவுடன் பரிமாறியவனை மட்டும் பலி கொடுத்து விட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகப் பார்க்கிறார்கள்.
ஊடகங்களைப் பொறுத்த வரையில், கதையில் ஒரு வில்லன் வேண்டும்; அவன் தோற்க வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் இந்த ‘ஊழல்’ மெகா சீரியலின் இப்போதைய எபிசோடில் வில்லன் ஆ.இராசா. அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் தோற்று விட்டார். இதை இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு கொண்டாடுவார்கள். பின்னர் அனைத்தும் மறக்கப்படும்; மறக்கடிக்கப்படும். அடுத்து இன்னும் சில மாதங்களில் வேறு ஏதாவது இரண்டு லட்சம் கோடி ஊழல் ஒன்று வெளிப்படும் நாளில் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த என்ன உத்தியைக் கடைபிடிக்கலாம் என்று விவாதிப்பதில் அவர்கள் ‘பிஸியாகி’ விடுவார்கள். இதற்கிடையே அந்த 1.76 லட்சம் கோடிகளின் கதி? அது வழக்கம் போல என்றென்றைக்கும் திரும்பி வரவே போவதில்லை.
மேலே உள்ள அந்த எழுபத்தி மூன்று லட்சம் கோடிகளும் திரும்ப தேசத்திற்குக் கிடைத்து விட்டதாகவோ அல்லது அதில் இருந்து ஒரு குண்டூசி முனை அளவுக்காவது திரும்பி வந்தது என்பது போன்ற தகவல்களோ இல்லவே இல்லை.
முன்பு வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு டாடாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, லாபத்தில் இயங்கிய மாடர்ன் பிரட்டை யுனிலீவருக்கு சல்லிசாக அள்ளிக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, அரசுத் துறை அலுமினிய உற்பத்தி நிறுவனமான ‘பால்கோ’வின் பங்குகளை குறைவாக மதிப்பிட்டு ஸ்டெர்லைட்டுக்கு விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ, நல்ல லாபத்தில் இயங்கி வந்த இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மதிப்பைக் குறைத்து விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ – அதே போன்ற விளைவு தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கும் ஏற்படும்.
அது என்னவென்று கேட்கிறீர்களா? மௌனம். ஆழ்ந்த மௌனம். வெட்கம் கெட்ட மௌனம். கேடு கெட்ட மௌனம். வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. ஊடகங்களின் இப்போதைய ஆர்வமெல்லாம் அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் என்ற பெரிய எண்ணிக்கை ஏற்படுத்தும் அதிர்ச்சி மதிப்பீட்டில் இருந்து நேயர்களிடையே எத்தனைக்கு எத்தனை அறுவடை செய்ய முடியும் என்பதில் தான்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கே ஒரு வைசிராய் இருந்தார் – அவருக்கு பொன்னிற முடியும் வெள்ளைத் தோலும் இருந்தது. இப்போது இருக்கும் வைசிராய்களுக்கு அந்த அடையாளங்கள் இல்லை. அந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர்த்து வேறெந்த வித்தியாசமும் இல்லை. இதைத் தான் மறைமுக காலனியாதிக்கம் – மறுகாலனியாதிக்கம் – என்கிறோம்.
வல்லரசு நாடுகளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்கும் இந்த அரசமைப்பைக்கும் அதன் அடியாட் படைக்கும் எதிராக நாட்டு மக்கள் தொடுக்கும் போராட்டம் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும். அந்த களப்பணியில் இணைவது மட்டுமே இந்த ஊழலுக்கு நாம் காட்டும் உண்மையான எதிர்ப்பாக இருக்க முடியும்.
வாழ்க எழில்மிகு பாரதம்!!!!!!!!
every thing is clear...but what to do.....
ReplyDeletecan do one thing.try to marry our CM. If it happens he will die soon. then v can recovr tamilnadu..........
ReplyDelete